×

விசேச நாட்களில் திருக்கோயில்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தருவதால் முன்னேற்பாடு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு அறிவுரை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (03.01.2024) ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 29வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 2021 – 2022, 2022 – 2023 மற்றும் 2023 – 2024 ம் நிதியாண்டுகளில் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட 526 அறிவிப்புகளில் நிறைவு பெற்ற பணிகளை தவிர இதர பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து மண்டல இணை ஆணையர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் ஆய்வு செய்தார்.

குறிப்பாக, 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான திருக்கோயில்களை புனரமைக்கும் திருப்பணிகள், ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் (Master Plan) கீழ், 15 திருக்கோயில்களில் நடைபெற்று வரும் பணிகள், ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டிற்கு மேல் நடைபெற்று வரும் திருப்பணிகள், புதிதாக உருவாக்கப்பட்டு வரும் தங்கத்தேர், வெள்ளித் தேர், மரத்தேர்கள் மற்றும் தேர் மராமத்து பணிகளின் தற்போதைய நிலை, திருக்குளங்களை புனரமைக்கும் பணிகள், மலைக்கோயில்களில் செயல்படுத்தப்படும் ரோப் கார் திட்டம், திருக்கோயில்களில் பராமரிக்கப்படும் பசுமடங்களை மேம்படுத்துதல், யானை நினைவு மண்டபங்கள் மற்றும் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை கட்டுமானப் பணிகள், ஒருகால பூஜைத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய திருக்கோயில்கள், கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிகள், அன்னதானக் கூடங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகளின் பணி முன்னேற்றம் போன்ற பொருண்மைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், திருகோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்கும் பணிகள், திருக்கோயில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்கும் பணிகள், திருக்கோயில்களின் வருவாய் இனங்களை முறைப்படுத்தி வசூலித்தல், திருகோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம், திருக்கோயில் மருத்துவ மையங்களின் செயல்பாடுகள், இராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கான ஏற்பாடுகள், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சிப் பள்ளிகளின் செயல்பாடுகள், துறை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

நிறைவாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில்:
தமிழ்நாடு முதலமைச்சர், நமது அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவதோடு, அதிக அளவில் அரசு மானியமும் வழங்கி வருகின்றார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை இன்றைய தினம் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். நமது பணிகளை மேலும் செம்மைப்படுத்திடும் வகையில் மண்டல இணை ஆணையர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சட்டமன்ற அறிவிப்புகளை குறித்த காலத்தில் நிறைவேற்றிட பணித் திட்டம் வகுத்து செயலாற்றிடவும், அவ்வபோது களஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்திடவும் வேண்டும்.

திருக்கோயில்களின் திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேச நாட்களில் பக்தர்கள் அதிகளவில் தரிசனத்திற்கு வருகை தருவதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளை பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு பக்தர்கள் எளிதாகவும், விரைவாகவும் தரிசனம் செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், இ.ஆ.ப., ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, தலைமைப் பொறியாளர் பி.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post விசேச நாட்களில் திருக்கோயில்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தருவதால் முன்னேற்பாடு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,M.K.Stal ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...